பதிவு செய்த நாள்
25
டிச
2021
01:12
சென்னை: ஸ்ரீ காளஹஸ்தி கோவில் நிர்வாகத்தின் கட்டுமான திட்டம் உள்ளிட்ட, ஐந்து நில வகைப்பாடு மாற்ற திட்டங்கள், சி.எம்.டி.ஏ., குழும கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டன. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வின் குழும கூட்டம், டிச., 23ல் நடந்தது. அதில், 23 நில வகைபாடு மாற்ற விண்ணப்ப கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. பின், 18 கோப்பு களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நீர் நிலை பிரச்னையால் மூன்று; சுற்றுச்சூழல் பிரச்னையால் இரண்டு என ஐந்து கோப்புகள் நிராகரிக்கப்பட்டன.
இதுகுறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், காளஹஸ்தி கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமான, 20.60 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் குறிப்பிட்ட சில பகுதிகள், நீர் நிலையாக முழுமை திட்டத்தில் வகைபடுத்தப்பட்டுள்ளன. இந்த நிலத்தை குடியிருப்பு திட்டத்துக்காக, வகைபாடு மாற்றக்கோரி, கோவில் நிர்வாகம் விண்ணப்பித்து இருந்தது.அதில் சில பகுதிகள் கொசஸ்தலை ஆற்று படுகையாக இருப்பது குறித்து புகார்கள் வந்தன.இதேபோல, பல்லாவரம் பெரிய ஏரியை ஒட்டி, ஏழு கிரவுண்ட் நிலத்தை குடியிருப்பு பயன்பாட்டுக்கு மாற்றக்கோரி விண்ணப்பம் வந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.மேலும், அம்பத்துாரை அடுத்த அயப்பாக்கத்தில் ஏரியின் மையப் பகுதியில் இருக்கும், 3.2 ஏக்கர் நிலத்தை குடியிருப்பு திட்டத்துக்காக வகைபாடு மாற்றக்கோரி விண்ணப்பம் வந்தது. இதற்கும் எதிர்ப்பு எழுந்தது. எனவே, நீர்நிலை பிரச்னையால் மூன்று திட்டங்களையும், சுற்றுச்சூழல் பிரச்னையால் இரண்டு திட்டங்களையும் நிராகரிப்பதாக, குழும கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.