பதிவு செய்த நாள்
29
டிச
2021
10:12
சென்னை : கோவில் சொத்துக்களை அடையாளம் கண்டு மீட்பதற்கு, அரசு துறைகள் ஒருங்கிணைந்து இயங்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தில் கோதண்டராமர் கோவில் உள்ளது. இக்கோவிலின் சொத்துக்களை மீட்கவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அறநிலையத்துறை சார்பில், சிறப்பு பிளீடர் டி.சந்திரசேகரன் ஆஜராகி, வருவாய் ஆவணங்களை சரிபார்க்கவும், விசாரணை நடத்தவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். கோவில் சொத்துக்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த செயல்பாடு தேவைப்படுகிறது, என்றார்.
கோவிலுக்கு சொந்தமாக 150 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், போலி ஆவணங்களை தயாரித்து, சொத்துக்களை அபகரிக்க முயற்சிகள் நடப்பதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது .மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: கோவில் சொத்துக்கள் தொடர்பான வருவாய் பதிவேடுகள், ஆவணங்களை, அதிகாரிகளின் உதவியுடன் சரிபார்க்க வேண்டும்; சொத்துக்களுக்கு உரிமை கோருபவர்கள் வைத்திருக்கும் ஆவணங்களையும் ஆராய வேண்டும்.
அதன்பின், கோவில் பெயரில் சொத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, அதிகாரிகளுக்கு அவகாசம் வேண்டும். கோவில் சொத்துக்களை மீட்க, வருவாய் துறை, அறநிலையத்துறை, உள்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. எனவே ஆவணங்கள், பதிவேடுகளை சரிபார்க்க, அரசு துறைகளின் அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நந்தம்பாக்கம் கோதண்டராமர் கோவில் நில விஷயத்தில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கூட்டத்தை, ஆறு வாரங்களில் கூட்டி, நடவடிக்கைக்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.