மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2021 10:12
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் வெளியூர் பக்தர்களுக்கு முறையான கட்டண விபரம் உள்ளிட்டவை தெரியாததால் அவர்களை கைடுகளாக வழி நடத்தி வரும் சிலரால் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது.
சபரிமலை பக்தர்கள், மேல்மருவத்துார் பக்தர்கள் தற்போது இக்கோயிலுக்கு அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். இவர்களின் வாகனங்கள் எல்லீஸ்நகர், தெப்பக்குளத்தில் உள்ள கோயில் இடத்தில் பார்க்கிங் செய்யப்படுகின்றன. அங்கிருந்து ஆட்டோக்களில் கோயிலுக்கு செல்கின்றனர். அவர்களிடம் அறிமுகமாகும் சிலர் தங்களை கைடு என்றுக்கூறி வழிநடத்தி செல்கின்றனர். தரிசன கட்டணம் போன்ற விபரங்கள் பக்தர்களின் பார்வையில் படும்படி இல்லாததால் ஏமாற்றப்பட வாய்ப்பு உண்டு.இதை தவிர்க்க கொரோனா ஊரடங்கிற்கு முன் வடக்கு கோபுரம் தவிர மற்ற கோபுர வாசல்களில் கட்டண விபரங்கள், தரிசன நேரம் போன்றவை குறித்து துாரத்தில் இருந்தே தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழியில் பக்தர்கள் பார்க்கும் வகையில் எல்.இ.டி., திரை அமைக்கப்பட்டது.
தற்போது அவை செயல்படவில்லை. மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.பக்தர்கள் பூட்டுகோயிலில் சட்டநாதர் சன்னதி உள்ளது. இங்கு நேர்த்திக்கடனுக்காக பக்தர்கள் பூட்டு காணிக்கை செலுத்தி வருகின்றனர். தற்போது அருகில் உள்ள அகோர வீரபத்திரர், அக்னி வீரபத்திரர் சன்னதியிலும் பூட்டு போட ஆரம்பித்துள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் சன்னதி கேட்டைக்கூட திறக்க முடியாத அளவிற்கு பூட்டுகள் தொங்க ஆரம்பித்துவிடும். இதுகுறித்த எச்சரிக்கை அறிவிப்பை கோயில் நிர்வாகம் வைத்தால் வீரபத்திரர் சன்னதிகளுக்கு நல்லது. சித்திரை வீதி கோயில் பூங்காவை இரவில் பக்தர்கள் ரசிக்கும் வகையில் மின்ஒளி வசதி ஏற்படுத்த கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும்.