பதிவு செய்த நாள்
29
டிச
2021
12:12
நாமக்கல்: நாமக்கல்லில், ஜன., 2ல், அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சுவாமிக்கு, ஒரு லட்சத்து, எட்டு வடை மாலை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. நாமக்கல் ஆஞ்சநேயர், 18 அடி உயரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் மார்கழி மாதம், மூலம் நட்சத்திரம் சர்வ அமாவாசை தினத்தில், அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதை முன்னிட்டு ஜன.,2ல், அனுமன் ஜெயந்தி அன்று சுவாமிக்கு ஒரு லட்சத்து, எட்டு வடைமாலை சாத்துப்படி அலங்காரம் நடக்கும். பக்தர்களுக்கு பிரசாதமாக வடை வழங்கப்படும். ஒரு லட்சத்து, எட்டு வடை மாலை தயாரிப்பதற்காக, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் இருந்து ரமேஷ் தலைமையில், 32 அர்ச்சகர் குழுவினர் நாமக்கல் வந்துள்ளனர். அவர்கள் கோவில் மண்டபத்தில், நான்கு நாட்கள் தங்கி இருந்து பணிகளை மேற்கொள்கின்றனர். ஒரு லட்சத்து, எட்டு வடை தயாரிப்பதற்காக, 2,050 கிலோ உளுந்த மாவு, 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 120 கிலோ உப்பு, 900 லிட்டர் நல்லெண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. வடை தயாரிக்கும் பணி நேற்று மாலை, 5:00 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. தினமும் காலை, 5:00 முதல் இரவு, 8:00 மணி வரை வடை தயாரிப்பு நடைபெறும்.