பதிவு செய்த நாள்
29
டிச
2021
02:12
புதுச்சேரி : வானியல் அரிய நிகழ்வுகளை, ஆண்டாள் திருப்பாவையில் அன்றே கணித்து கூறியுள்ளார் என ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்தார்.புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், மார்கழி மாத திருப்பாவை சொற்பொழிவு நடந்து வருகிறது.
நேற்று 13ம் நாள் சொற்பொழிவில், ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்ததாவது; ஆண்டாளின் திருப்பாவை 13ம் பாசுரத்தில், வேதம் உணர்த்தும் உண்மைப் பொருளை உணர்ந்தால், இந்த்ரிய சுகங்களைக் களையச் சொல்கிறாள் என்பது தெளிவாகும். அதற்கு ஒரே வழி, சரணாகதியைத் தவிர வேறில்லைஆண்டாள் இப்பூமியில் வாழ்ந்ததாகக் கணிக்கப்பட்ட காலத்தில், சுக்ரன் ஒரு பக்கம் தோன்ற, வியாழன் நேரெதிர் பக்கம் மறைந்த, அரிய நிகழ்வு நடந்துள்ளதை வானவியல் குறிப்புகள் பறைசாற்றுகின்றன. இத்தனைக்கும், தொலைநோக்கி என்ற கருவி கண்டுபிடிக்கப்படாத காலம்.ஆனால், ஆண்டாள் உள்ளிட்ட நம் முன்னோர்கள் மெய்ஞானம் என்ற தொலைநோக்கி மூலம் தற்போது விஞ்ஞானம் சொல்லும் பல உண்மைகளை தத்துவார்த்தமாக, மறைப்பொருளாக, உணர்த்தி உள்ளனர்.அந்த வகையில், அதிசய வானவியல் நிகழ்வு குறித்து துல்லியமாக, ஒரு வாக்கியத்தில், வெள்ளியெழுந்து வியாழன் உறங்கிற்று என ஆண்டாள் எளிதாகக் கூறியுள்ளாள்.இது போன்ற அதிசய நிகழ்வு, வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிய நிகழ்வு, கடந்த 2008 டிச.,1ம் தேதி நடந்தது.
நம்மில் எத்தனை பேர் அதைப் பார்த்தோம், குறித்து வைத்தோம், உடனே ஆண்டாள் சொன்னதோடு ஒப்பிட்டுப் பார்த்து வியந்தோம்?அறிவியல் காலத்தில் வாழும் போதே நாம் இவ்வாறு அலட்சியமாக உள்ளோம். ஆனால், இந்த அரிய வானிலை நிகழ்வைக் கண்டது மட்டுமல்லாமல், வரும் சந்ததியினர் அறியும் வண்ணம் திருப்பாவையில் நயமாகப் பதிவும் செய்துள்ளாள் ஆண்டாள்.வான சாஸ்திரத்தில் வியாழனும் சுக்ரனும் ஒன்றாகத் தெரிவது அரிய நிகழ்வு. அது போன்ற நிகழ்வு, விடியற் காலையில் தெரியும் நாளிலிருந்து பத்து மாத முடிவில் மீண்டும் மாலை நேரத்திலும் தெரியும்.அவ்வாறு மாலை நேரத்தில் தெரிந்த நாளிலிருந்து இரண்டரை ஆண்டு முடிவில் மீண்டும் காலை நேரத்திலும் தெரியும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.அதன்படி, ஆண்டாள் சொன்ன, வெள்ளி எழுந்து வியாழன் உறங்கும் அபூர்வம், கடந்த 2011 மே 11ம் தேதி அதிகாலையிலும், மார்ச் 2012ல் மாலையிலும் நடந்தது எனவும், அப்போது இரு கிரகங்களும் தங்கள் வட்டப் பாதையில் வரும்போது, மிக அருகில் தோன்றின என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.மீண்டும் 2065, நவ., 22ம் தேதி, இவ்விரு கிரகங்களும் தங்கள் வட்டப்பாதையில் வரும்போது இடைவெளி சுருங்கி, ஒரே புள்ளியாக, ஒளிப்பிழம்பாகத் தோன்றக் கூடிய வாய்ப்பு உள்ளது என விண்வெளி அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர்.இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.