பதிவு செய்த நாள்
28
டிச
2021
12:12
புதுச்சேரி-மனிதராயினும், மிருகமாயினும் தாயன்பு நிகரற்றது என ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்தார்.
புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் மார்க்கழி மாத திருப்பாவை சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. நேற்றைய சொற்பொழிவில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்ததாவது:திருப்பாவையின் 12வது பாசுரத்தில் பொய்கை ஆழ்வாரை துயில் எழுப்புகிறாள் ஆண்டாள்.இந்த பாசுரத்தில் தாய்மையின் உன்னதத்தை சொல்கிறாள். கன்றுக்கு பசிக்குமே என்ற எண்ணம் ஏற்பட்ட மாத்திரத்தில், கறக்காமலேயே எருமைகள் பால் சுரக்கத் துவங்கின என இந்த பாசுரத்தில் சொல்லியுள்ளார் ஆண்டாள். மனிதராயினும், மிருகமாயினும் தாயன்பு நிகரற்றது. கூடாரை வெல்லும் என்ற 27ம் பாசுரத்தில் பால் சோறு பற்றி சொன்ன ஆண்டாள், 12வது பாசுரத்தில் பால் சேறு என்கிறார். அவ்வீட்டின் செல்வ செழிப்புக்கு தரையெல்லாம் பால் ஓடுவதை ஒரு குறியீடாக சொல்கிறாள்.கன்றை நினைத்து, உண்டு செழித்திருந்த எருமைகள் பாலை சுரந்தாலும், கன்றுகள் குடித்த பின்னும் சுரந்து கொண்டே இருந்த பால், தரையில் ஓடி, மண் புழுதியுடன் கலந்து, வீடே சேறாகி விட்டது என்கிறார்.தென்னிலங்கை கோமானை செற்ற என்ற பாசுர சொற்களில் பல உண்மை பொதிந்துள்ளது.ராவணனை கோமான் என்கிறாள் ஆண்டாள். காரணம், காமம் தலைக்கேறினாலும், ராவணன், பிராட்டியிடம் அபசாரப்படவில்லை. போகப்பொருளாக மட்டுமே அவளை கருதவில்லை.அவள் விருப்பப் பட்டால் மட்டுமே அவளை அடைவேன் என்று மதித்து, அவளிடம் தன்னை ஏற்கும்படி இறைஞ்சினான். ஆனால், தேவேந்திரன் மகன் ஜெயந்தனோ, போகம் மட்டுமே கருதி பிராட்டியிடம் அபசாரப்பட்டான். அதனால் தான் தேவனாய் பிறந்தாலும், தேவேந்திரன் மகன் ஜெயந்தன் காகாசுரம் ஆனான். ராவணன் அரசுன் ஆனாலும், கோமான் ஆனான்.இப்படி கோமான் என்ற சொல்லாடலால், ஆண்டாள் நயமாக ராமாயண நிகழ்வான காகாசுர விருந்தாந்தத்தை சொல்லாமல் சொல்லியுள்ளார். திருப்பாவையின் ஒவ்வொரு வரிகளிலும், ஆண்டாளின் சொல்லாடல் புலமை ஆழமானது.இவ்வாறு அவர் சொற்பொழிவாற்றினார்.