பதிவு செய்த நாள்
02
ஜன
2022
06:01
பெ.நா.பாளையம்: அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனுமன் கோவில்களில் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன.
நரசிம்மநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகரில் தன சாந்த சொரூப ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஆறாம் ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி, சனிக்கிழமை மாலை ஆஞ்சநேயருக்கு மகா திருமஞ்சனம் நடந்தது. காலை, 8:00 மணிக்கு, உலக மக்களின் நன்மை வேண்டி மகா சுதர்சன யாகம் மற்றும் தன்வந்திரி யாகம் ஆகியன நடந்தன. காலை, 10:00 மணிக்கு மேல் தன சாந்த சொரூப ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம், தரிசனம் ஆகியன நடந்தன. தொடர்ந்து, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
துடியலூர் அருகே விஸ்வநாத புரத்தில் உள்ள குபேர ஆஞ்சநேயருக்கு, அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆப்பிள், அன்னாச்சி, திராட்சை, சாத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பழங்கள் அடங்கிய அலங்காரத்தில் அனுமன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் வெற்றிலை மாலை, துளசி மாலை அணிவித்து வழிபட்டனர். தொப்பம்பட்டி அருகே ஜங்கம நாயக்கன் பாளையத்தில் உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயிலில், ராஜ அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் அன்னதானமும் நடந்தது.