ஒருமுறை தஞ்சைக் கோட்டையை ஆற்காடு நவாபின் படைகள் முற்றுகையிட்டன. தஞ்சை மன்னர் அப்போது அனுமன் பக்தரான அருணாசலக் கவிராயர் மூலம் சிப்பாய்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் அனுமனின் வரலாற்றைச் சொல்ல ஏற்பாடு செய்தார். ‘அனுமன் விஜயம்’ என்கிற தலைப்பில் அவரது வீரதீரங்களை உணர்ச்சிப் பெருக்குடன் வெளிப்படுத்தினார் கவிராயர். இவற்றைக் கேட்ட சிப்பாய்களின் நரம்புகள் முறுக்கேறின. ‘அனுமன் போல நாங்களும் ஆவேசத்துடன் பாய்ந்து அரண்மனையைச் சுற்றி வளைத்த நவாபின் படைகளை விரட்டியடிப்போம்’ என ஆயுதங்களுடன் புறப்பட்டனர். பிறகென்ன... ஆவேசமுடன் வந்த வீரர்களை நவாபின் படையினரால் எதிர்கொள்ள முடியாமல் ஓட்டம் பிடித்தனர்.