பதிவு செய்த நாள்
06
ஜன
2022
11:01
திருப்பதி: வரும் 10ம் தேதிக்குள், திருமலையின் இரண்டாம் மலைப் பாதையில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து, பயன்பாட்டிற்கு வரும் என, திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள பகுதியில், கடந்த மாதம் கனமழை கொட்டித் தீர்த்தது. 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த அந்த மழையால், கோவிலுக்கு செல்லும் இரண்டாம் மலைப் பாதையில் நான்கு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.இந்த மலைப் பாதையை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர, தேவஸ்தான அதிகாரிகள் உறுதியாக உள்ளனர். அதற்காக, போர்க்கால அடிப்படையில் அந்த மலைப் பாதையை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.சேதமடைந்த மலைப் பாதையில், பக்கச்சுவர்கள் கட்டும் பணிகள் முடிந்துவிட்டன. பாறைகள் உடைந்து விழும் அபாயம் உள்ள இடங்களில், ராக் போல்ட் தொழில்நுட்பத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, ஒரு இணைப்பு சாலையை திறந்து, திருமலைக்கு செல்லும் வாகனங்கள் அதன் வழியாக அனுப்பப்பட்டு வருகின்றன. வரும் 10ம் தேதி, இந்த இரண்டாவது மலைப் பாதை சாலை பயன்பாட்டிற்கு வரும், என, தேவஸ்தான பொறியாளர் ஜெகதீஸ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார்.