நயினார்கோவில்: பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் வாசுகி தீர்த்தக்குளம் மழையால் நிரம்பியுள்ள நிலையில், பராமரிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில் எதிரில் வாசுகி தீர்த்தக்குளம் உள்ளது. மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற சிறப்பு பெற்ற இக்கோயிலுக்கு ஆண்டு முழுவதும் நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் வருகின்றனர். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் எதிரில் உள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடிச் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த மாதங்களில் பெய்த மழையால் குளம் நீரால் நிரம்பி உள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து குளத்தைச் சுற்றி வீடு மற்றும் வணிக நிறுவனத்தை நடத்துபவர்கள் கழிவுகளை குளத்தில் சேரும் படி குழாய்களை அமைத்து உள்ளனர். மேலும் குளத்தைச் சுற்றியுள்ள குளியல் தொட்டி கழிவுநீர் உட்பட குப்பைகளும் குளத்தில் சேருகின்றன. இதனால் குளம் அசுத்தமடைந்து இங்கு குளிக்கும் பக்தர்கள் தொற்றுநோய் பீதி அபாயத்தில் உள்ளனர். ஆகவே பக்தர்கள் புனிதமாக கருதும் குளத்தைச் சுற்றி முறையான வேலி அமைப்பதுடன், கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். இதனால் அப்பகுதியில் நீராதாரம் முறைப்படுத்த படுவதுடன், கொசு உள்ளிட்ட பூச்சிகள் உற்பத்தி ஆவது தடுக்கப்படும்.