பழநி: பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு வரும் வழியில் பாதுகாப்புடன் பயணிக்க போலீசார் அறிவுறுத்த வேண்டும். பழநிக்கு தற்போது பாதயாத்திரையாக வெளிமாநில வெளி மாவட்ட பக்தர்கள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். கடந்த சில நாட்களாக சிறுசிறு விபத்துகளில் பாதயாத்திரை பக்தர்கள் சிக்கி அவதிப்படுகின்றனர். எனவே பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் குழுவாகவும், சாலையின் இடது ஓரத்திலும் வரவேண்டும். இரவு நேரங்களில் ஒளிரும் பட்டைகள் மற்றும் டார்ச் லைட் உதவியுடன் எதிரே, பின்புறம் வரும் வாகனங்களுக்கு சமிக்கை அளித்த வண்ணம் வரவேண்டும்.
தங்குமிடங்களில் தங்களுடைய பொருட்களை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும்.பிரச்சனை சிரமம் ஏற்படும் நிலையில் அருகில் உள்ள போலீசாரை தொடர்பு கொண்டு உதவி கோர வேண்டும். பழநி வரும் பக்தர்கள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பாதயாத்திரை பாதையில் நடந்து வர வேண்டும். போலீசார் பாதயாத்திரை வரும் பக்தர்களின் பாதைகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி அவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். பழநி வரும் பாதையில் பயணிக்கும் பேருந்துகள், கனரக வாகனங்கள் அதிக வேகத்தில் வருவதை தவிர்க்க வேண்டும். பாதயாத்திரை பக்தர்களை கவனித்து ஓட்டுநர்கள் வாகனத்தை இயக்க வேண்டும். அதேபோல் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறை படி கோயில் திறந்திருக்கும் கால நேரங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் பாதயாத்திரை பக்தர்கள் கோயிலை வந்தடையும் நேரம் மற்றும் தினத்தை திட்டமிட்டு பாதயாத்திரை துவங்கி வரவேண்டும். கோயிலில் வரிசையில் நின்று அமைதியாக தரிசனம் செய்ய வேண்டும்.