பதிவு செய்த நாள்
07
ஜன
2022
08:01
புதுச்சேரி: புறப்பற்றுதலை துறந்து, அகப்பற்றுடன் எம்பெருமானை சரணடைய வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்தார்.
புதுச்சேரி காந்தி வீதி வரதராஜப் பெருமாள் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி திருப்பாவை சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. நேற்றைய சொற்பொழிவில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்ததாவது:திருப்பாவையில் 21வது பாசுரத்தை தொடர்ந்து, 22வது பாசுரத்தையும் கண்ணனை துயிலெழுப்பும் பாசுரமாக ஆண்டாள் அருளியுள்ளார்.எல்லோரும் துயிலெழுந்து விட்டனர். ஆனால் பரமனாகிய கண்ணபிரான் இன்னும் துயில் எழவில்லையே என்ற ஆண்டாளின் ஆதங்கம் இந்த பாசுரத்தில் எதிரொலிக்கிறது.இந்த பாசுரத்தில் தனக்கு மாற்று, ஒப்பார் இல்லாத எம்பெருமானின் பெருமையை உணர்த்தி, ஜீவாத்மாக்களாகிய நாம், பரமாத்மாவின் அடியவர்கள்; அடிமைகள் என்ற மன தன்மை கொள்ளும் பக்தி நிலையை சொல்வதாக அமைந்துள்ளது.அத்தகைய நிலையை அடைய நான், எனது, நமது போன்ற அகங்காரங்கள் அழிந்து, நாம் ஒன்றும் இல்லை.எல்லாம் அவனே என்ற உண்மையை உணர்கின்ற பக்தி நிலை தான் இந்த பாசுரத்தின் உள்ளுறை பொருள்.மொத்தமுள்ள 24 தத்துவங்களோடு, 25வது தத்துவம் ஆன்மா , 26வது தத்துவம் பகவான் என்கிறது வைஷ்ணவ தத்துவம்.
மனம் வேறு; குணம் வேறு. அறிவும் வேறு. அறிவு நல்லதையும் அறியும், தீயதையும் அறியும். ஆனால் மனம் எதை வேண்டுமானாலும் விரும்பலாம். குணம் என்பது செயலில் வெளிப்படுவது. மனதில் வருத்தமிருந்தாலும் சிலர் நல்லதை செய்வதைப் பார்க்கலாம். அகத்தில் இருக்கும் காரம் அகங்காரம். அது, போக வேண்டும். இப்படி ஆன்ம தத்துவங்கள் இருபத்து ஆறில், அகங்காரம் 22வது தத்துவமாக உள்ளது. அதனால் தான் ஆண்டாள் அகங்கார பங்கத்தை 22வது பாசுரத்தில் சொல்கிறாள். புறப்பற்றுதலை துறந்து, அகப்பற்றுடன் எம்பெருமானை சரணடைய வேண்டும் என ஆண்டாள் உணர்த்துகிறாள்.இவ்வாறு அவர் சொற்பொழிவாற்றினார்.