ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2022 10:01
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் நேற்று முதல் துவங்கியது. ஜனவரி 14 வரை 8 நாட்கள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு வடபத்ரசயனர் சன்னதியில் உள்ள ராப்பத்து மண்டபத்தில் ஆண்டாள் எழுந்தருளினார். அங்கு ஆண்டாளுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, சிறப்பு திருமஞ்சனம், திருவாராதனம் கோஷ்டி, பஞ்சாங்கம் வாசித்தல் நடந்தது. பின்னர் ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வில்லிபுத்தூரார் மங்களாசாசனம் நடந்தது. பின்னர் மாலை 6:00 மணிக்கு ஆண்டாள் சன்னதி வந்தடைந்தார். அங்கு பகல் பத்து உற்சவத்தின் ஐந்தாம் திருநாள் நடந்தது. நேற்று முதல் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்பதால் மெயின் கேட் முன்பு நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். வருடம்தோறும் திருமுக்குளம் மேற்கு கரையில் அமைந்துள்ள எண்ணெய்க்காப்பு மண்டபத்தில் இந்த உற்சவம் நடப்பது வழக்கம். ஆனால், தற்போது கொரோனா காரணமாக வடபத்ரசயனர் சன்னதி இராப்பத்து மண்டபத்தில் எண்ணை காப்பு உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கோவில் பட்டர்கள் செய்துள்ளனர்.