பதிவு செய்த நாள்
08
ஜன
2022
11:01
புதுச்சேரி-நரசிம்மனை உள்ளத்தில் நிறுத்தி உருக வேண்டினால், நினைத்த மாத்திரம் தோன்றி பலனிப்பார் என, ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் சொற்பொழிவாற்றினார்.
புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் மார்கழி மாத திருப்பாவை சிறப்பு சொற்பொழிவு கடந்த 16ம் தேதி துவங்கியது. நேற்று 23வது பாசுரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்ததாவது:திருப்பாவை 23வது பாசுரத்தில் எம்பெருமானின் கருணையும், கிருஷ்ண சிம்மத்தின் கம்பீரத்தையும் போற்றி புகழ்வதாக அமைந்துள்ளது. லட்சுமி நரசிம்மனை மனத்தில் கொண்டு ஆண்டாள் பாடிய பாசுரம் இது.பெரியாழ்வாரும், ஆண்டாளும் சிறந்த லட்சுமி நரசிம்ம பக்தர்கள் என்பதை அவர்களின் பாசுரங்களில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த 23வது பாசுரத்தின் கூட்டுத் தொகை ஐந்து. இவ்வகையில் நட்சத்திர வரிசையில் ஐந்தாவது நட்சத்திரமான மிருகசீரிஷம் நரசிம்மத்தை குறிக்கிறது என்பதால், 23வது பாசுரத்தில் ஆண்டாள் நரசிம்மனை போற்றி அருளியுள்ளார்.ராமாவதாரம் நிகழ்ந்து 39 ஆண்டுகள் கழித்து தான் ராவண வதம் நடந்தது. தேவர்களின் துன்பம் தீர்ந்தது. ஸ்ரீராம பட்டாபிேஷகம் அதன் பிறகு நடந்தது.ஆனால் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த அக்கணமே ஹிரண்யகசிபு வதம் நிகழ்கிறது. நரசிம்மனை உள்ளத்தில் நிறுத்தி உருக வேண்டினால், நினைத்த மாத்திரம் தோன்றி பலனிப்பார் என்பதால், இந்த பாசுரத்தில் நரசிம்மனையே போற்றியுள்ளார்.மாயக்கண்ணன் துயில் எழுந்து வரும் அழகை தன் பெடையோடு குகையிலேயே படுத்திருக்கும் சிங்கம் விழித்து எழுந்து வருவதுடன் ஒப்பிட்டு ரசிக்கிறாள் ஆண்டாள்.
மலை முழைஞ்சு என்ற சொற்களுக்கு நம் மனமாகிய குகை என்று உருவகப்படுத்தி பொருள் கொண்டால், அந்த மனக்குகைக்குள் நிறைந்து இருப்பது ஆத்மா என்ற பெண் சிங்கமும், பரமாத்மா என்ற ஆண் சிங்கமும் என்று அனுபவிக்கலாம்.இந்த பாசுரத்தில் நமது மனதை மூடி கிடக்கும் அகந்தை மமதை எனும் இருளை நீக்கும் விதத்தில் மறைகள், அதன் அங்கமாய் விளங்கும் உபநிடதங்கள், ஆழ்வார்களின் அருளி செயல்கள், ஆச்சார்யர்களின் உபதேசங்கள் ஆகியவை உணர்த்தும் தத்துவங்களை மழைபோல பொழிய வேண்டும் என்று ஆண்டாள் வேண்டுகின்றாள்.இவ்வாறு அவர் சொற்பொழிவாற்றினார்.