மானாமதுரை வீர அழகர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2022 10:01
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்கு உட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக இன்று (13ம் தேதி) அதிகாலை 4:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி,பூதேவியருக்கு 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடத்தப்பட்டன.அதனைத் தொடர்ந்து சுவாமிகள் நம்மாழ்வாருக்கு காட்சியளித்த பின்னர் அதிகாலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத்தொடர்ந்து கோயிலைச் சுற்றி வலம் வந்த சுவாமிகள் தாயார் மண்டபத்திற்கு எழுந்தருளினார்.அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு விசேஷ தீபாராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்பட மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் கோபி மாதவன் மற்றும் பலர் செய்திருந்தனர்.