பதிவு செய்த நாள்
13
ஜன
2022
01:01
திருப்பதி:திருமலை ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இன்று நள்ளிரவு வைகுண்ட வாசல் திறக்கப்பட உள்ளது. அடுத்த 10 நாட்களுக்கு, வைகுண்ட வாசல் வழியாக சென்று தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள திருமலை ஏழுமலையான் கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 10 நாட்களுக்கு வைகுண்ட வாசல் திறந்து வைக்கப்பட உள்ளது. இன்று நள்ளிரவு திருப்பாவை பாசுரத்துடன், ஏழுமலையான் துயில் எழுப்பப்பட்டு, நித்திய கைங்கரியங்களுக்குப் பின், வைகுண்ட வாசல் திறக்கப்பட உள்ளது. இதற்காக, இலவச சர்வ தரிசன டோக்கன்கள், 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள், வி.ஐ.பி., பிரேக் தரிசனம் உள்ளிட்டவற்றை, இணையதள முன்பதிவு சேவை வாயிலாக தேவஸ்தானம் வழங்கி உள்ளது.இதைப் பெற்ற பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், தங்களுடன் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்கள் செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா பரிசோதனை செய்து, அதன் நெகடிவ் சான்றிதழை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் என அனைத்து வசதிகளையும் தேவஸ்தானம் செய்துள்ளது. லட்டு பிரசாதங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கன மழை காரணமாக சேமடைந்த திருமலைக்கு செல்லும் இரண்டாவது மலைப்பாதை, 40 நாட்களுக்கு பின் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.