பதிவு செய்த நாள்
15
ஜன
2022
12:01
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய ஐந்து நாட்கள் தடை விதிக்கப்பட்டதால், பக்தர்கள் கோவில் வெளியிலிருந்து கோபுர தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர். 14 கி.மீ., துாரம் நடந்து கிரிவலம் சென்று, அஷ்டலிங்க கோவில்களிலும் தரிசனம் செய்வர். இந்நிலையில் கொரோனா, ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்திடும் விதமாக, ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த, 7-, முதல், 9-, வரை மூன்று நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து மீண்டும் நேற்று முதல், வரும், 18- வரை ஐந்து நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்து அரசு உத்தரவிட்டது.அதன்படி ஐந்து நாட்கள், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கோவில் ராஜகோபுரம் உள்ளிட்ட நான்கு கோபுர வாயில் முன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும், தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள், நேற்று தை மாத பிறப்பை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய முடியாமல், வெளியிலிருந்து கோபுரத்தை மட்டும் தரிசனம் செய்து சென்றனர்.