நத்தம்: பழனி தைப்பூச விழாவிற்கு காரைக்குடி நகரத்தார் காவடி குழுவினர் வைரவேலுடன் 350க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து நத்தம் வழியாக பழனி சென்றனர்.
பழனி தைப்பூச விழாவையொட்டி காரைக்குடி பகுதிகளை சேர்ந்த நகரத்தார் காவடி குழுவினர் வைரவேல் உடன் நத்தம் வழியாக பாதயாத்திரையாக பழனி சென்றனர். காரைக்குடி, தேவகோட்டை, கண்டனூர், புதுவயல், பள்ளத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட காவடி எடுத்து வரும் பக்தர்கள் குன்றக்குடியில் குழுவாக சேர்ந்தனர். அங்குள்ள சண்முகநாத பெருமாள் கோயிலில் பாரம்பரிய வைரவேல் வைத்து பூஜை செய்து பாதயாத்திரையாக புறப்பட்டனர். இக்குழுவினர் நேற்றிரவு சமுத்திராப்பட்டி தங்கினார். இன்று காலை நகரத்தார் காவடிக் குழுவினர் நத்தம் வந்தனர். நத்தம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வாணியர் மடத்தில் காவடி மற்றும் வைர வேலுக்கு சிறப்பு பூஜை செய்து, இங்கிருந்து புறப்பட்டனர். தொடர்ந்து திண்டுக்கல் நகர் வழியாக பழனி நோக்கி பாதயாத்திரை செல்கின்றனர். தைப்பூசத்திற்கு மறுநாள் காரைக்குடி நகரத்தார் குழுவினருக்கு என்று தனியாக சிறப்பு பூஜை நடைபெறும். பின்னர் மீண்டும் பழனியில் இருந்து பாதயாத்திரையாகவே ஊர் திரும்புவார். சுமார் 400 ஆண்டுகளாக தொடரும் இந்த பாதையாத்திரையின்போது நகரத்தார்கள் பாரம்பரியமாக வெள்ளை வேட்டி அணிந்து, செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.