பதிவு செய்த நாள்
15
ஜன
2022
06:01
வடவள்ளி: மருதமலை கோவிலில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அடிவாரத்தில் நின்று பக்தர்கள் வழிபாடு செய்தனர். தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, நேற்று முதல் வரும் 18ம் தேதி வரை, அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தைப்பூச திருவிழா நடந்து வரும் நிலையில், தைப்பூசத் திருவிழாவின் மூன்றாம் நாளும், பொங்கல் பண்டிகையையொட்டியும், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்தனர். கோவில்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் மருதமலை அடிவாரத்தில் உள்ள படிக்கட்டு பகுதியில் கற்பூரம் ஏற்றி, சுவாமியை வழிபட்டு சென்றனர். அதேபோல, பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலிலும் நேற்று ஏராளமான பக்தர்கள், கோவிலின் வெளியே நின்று சுவாமியை தரிசித்து சென்றனர்.