தேவலோகப் பசுவான காமதேனு பெண் முகமும், பசுவின் உடம்பும் கொண்டது. பாற்கடலில் இருந்து பிறந்த இந்தப் பசு, கேட்டதை எல்லாம் வாரி வழங்கும் தன்மை கொண்டது. “உலகத்தின் தாயான காமாட்சி அன்னையே காமதேனுவாக இருந்து கேட்டதை நமக்கு தருகிறாள்,” என மூகர் என்ற புலவர், பஞ்சசதீ என்னும் ஸ்தோத்திரத்தில் குறிப்பிடுகிறார். கோயில் திருவிழாவில் அம்மன் காமதேனு வாகனத்தில் பவனி வரும் போது வழிபட்டால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.மந்திரப்பாட்டு சிவபெருமானே பசுவின் சாணத்தில் இருந்து திருநீறு தயாரிக்கும் முறையை சொல்லியுள்ள விபரம் உபநிஷதம் ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது. சிவனுக்கு திருநீற்றால் அபிஷேகம் செய்தால் சகல சவுபாக்கியமும் உண்டாகும் என்று காரண ஆகமம் கூறுகிறது. கூன் பாண்டியனின் வெப்புநோயைப் போக்க ஞானசம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடினார். இதை படிப்பவர்களிடம் மந்திரமோ, தந்திரமோ எடுபடாது. ஏனென்றால் திருநீறே சிறந்த மந்திரமாகவும், தந்திரமாகவும் விளங்குகிறது என்கிறார் ஞானசம்பந்தர்.