நமக்கு ஒரு கஷ்டம் வந்தால் போதும், ‘நான் எதிர்பார்த்ததற்கு மாறாக இது நடந்துவிட்டது’ என சொல்வோம். இதைக் கேட்பவர்கள், ‘இதை முன்னாடியே எங்களிடம் சொல்லியிருக்கலாமே’ என கூறுவர். இப்படி சில சமயத்தில் நம் மனதில் இருப்பது பிறருக்கு தெரியாமலேயே போய்விடுகிறது. சிலருக்கோ தன் குழந்தைகளுக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்று தெரியாது. தனக்கு பிடித்ததையே குழந்தைகளுக்கும் பிடிக்கும் என்று வாங்கித்தருவர். இது தவறான விஷயம். முதலில் அவர்கள் மனதில் என்ன உள்ளது என தெரிந்து கொள்வதுதான் நல்லது. அப்படித்தான் நண்பர்கள், சகபணியாளர்கள் விஷயத்திலும் நடந்து கொள்வோம். அவர்கள் மனதில் என்ன உள்ளது என அறியாமல் அவர்களை தவறாக எண்ணிவிடுவோம். இதற்கு தீர்வு வெளிப்படையாக பேசுவதுதான். நாக்கு ருசி பார்க்க மட்டுமல்ல. மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு தேவைப்படுகிறது.