சிலர் அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி செய்வர். காபி, டீ என்று எதுவும் குடிக்க மாட்டர்கள். கெட்ட பழக்கங்களை நெருங்கக்கூட விட மாட்டார்கள். உண்மையில் இந்த நல்ல பழக்கம் கொண்டவர்களை நல்லவர்கள் என்று சொல்லலாமா என்று கேட்டால்... நிச்சயம் இல்லை. எப்படி என்று கேட்கிறீர்களா... உடல்நலத்திற்கு உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என எவ்வளவு தேவையோ, அதே அளவிற்கு மனநலனுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். ஒருவருடைய பழக்கவழக்கங்களை மட்டும் வைத்து அவரை நல்லவர் என்று சொல்லிவிட முடியாது. யார் ஒருவர் பிறர் நன்றாக வாழ வேண்டும் என நினைக்கிறாரோ அவரே நல்லவர். ‘அவனைப்போல் நான் மது அருந்துவதில்லை. சிகரெட் பிடிக்க மாட்டேன்’ என பலர் பெருமையாக பேசுவர். இப்படி பேசிவிட்டு பிறருக்கு எப்படி கெடுதல் செய்யலாம் என யோசிப்பர். உண்மையில் இவர் மது அருந்துபவரை விட மிகவும் மோசமானவர். அதாவது நல்ல பழக்கம் உள்ளவர்களை குறைசொல்லவில்லை. அதையும் விட நல்ல மனதுடன் இருக்க வேண்டும் என்பதே உண்மை.