பதிவு செய்த நாள்
18
ஜன
2022
11:01
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டதால், கிரிவலப்பாதை வெறிச்சோடியது. தடையை மீறி செல்ல முயன்ற பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மாநிலம் முழுதும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், மார்கழி மாத பவுர்ணமி தினமான நேற்று அதிகாலை 4:14 முதல் இன்று காலை 6:00 மணி வரை, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், உள்ளூர் பக்தர்கள் மற்றும் ஓரிரு வெளியூர் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல முயன்றனர். கிரிவலப்பாதை முழுதும் போலீசார் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பக்தர்களை தடுத்து, கிரிவலப்பாதையில் செல்வோரை திருப்பி அனுப்பினர்.கிரிவலப்பாதையில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளியில் சென்று வீடு திரும்பும் போது, அவர்களை பலத்த சோதனை செய்து, அப்பகுதியை சேர்ந்தவர்களா என, அதற்கான ஆவணங்களை ஆய்வு செய்த பிறகே அனுமதித்தனர். இதனால், பக்தர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகினர். பக்தர்கள் கிரிவலம் செல்லும் போது, கிரிவலப் பாதையிலுள்ள சாதுக்களுக்கு அன்னதானம் மற்றும் பண உதவிகளை செய்து செல்வர். பக்தர்கள் வராததால், சாதுக்கள் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர். திருவண்ணாமலையில் தொடர்ந்து, 23வது மாதமாக பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.