திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் இன்றி தைப்பூச அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2022 04:01
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான பழனி ஆண்டவர் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
மலைக்குப் போகும் பாதையில் மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழனியாண்டவருக்கு தைப்பூசத்தன்று விழா நடைபெறுவது வழக்கம். காலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து பூஜை, அபிஷேக பொருட்களை சிவாச்சாரியார்கள் பழனி ஆண்டவர் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு எழுந்தருளியுள்ள மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உட்பட பல்வகை திரவிய அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள உற்சவர்கள் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை, முத்துக்குமார சுவாமி தெய்வானை தனித்தனியாக கோவிலுக்குள் புறப்பாடாகினர். வழக்கமாக இரண்டு மூலவர்கள் ரத வீதிகளில் உலா நிகழ்ச்சி நடைபெறும். கொரோனா தடை உத்தரவால் கோயிலுக்குள் சுவாமி புறப்பாடு நடந்தது. அதிகாலை முதல் பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து வந்தனர். கோயில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கோயில் வாசலில் நேர்த்திக்கடனை செலுத்தி சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன் முன்பு யாகசாலை பூஜைகள் முடிந்து மூலவர், உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. மாலையில் உற்சவர்கள் கோயிலுக்குள் புறப்பாடு நடந்தது. ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் மூலவர், சக்திவேலுக்கு அபிஷேகம் பூஜைகள் முடிந்து மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்துப்படியானது.