சூலூர்: தேவராயம்பாளையம் வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
சூலூர் அடுத்த தேவராயம்பாளைத்தில் உள்ள ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவில் பழமையானது. பால விநாயகர், பட்டத்தரசி அம்மன், கருப்பராயன், கன்னிமார் கோவில்களும் பழமையானவை. இவற்றின் கும்பாபிஷேகம் முடிந்து இரண்டாம் ஆண்டு விழா மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. கணபதி ஹோமத்துடன் ஆண்டு விழா மற்றும் கல்யாண உற்சவ விழா துவங்கியது. புனித நீர் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஹோமங்கள் நடந்தன. அதை தொடர்ந்து அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்த வேணுகோபால கிருஷ்ண சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். வள்ளி கும்மி ஆட்டமும், ஆன்மீக சொற்பொழிவும் நடந்தன. விழா ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்களும், இளைஞர் நற்பணி மன்றத்தினரும் செய்திருந்தனர்.