பதிவு செய்த நாள்
24
ஜன
2022
05:01
கடலுார், : கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் சம்ப்ரோக்ஷணம் நடந்தது. கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு சம்ப்ரோக்ஷணம் நேற்று நடந்தது.
இதையொட்டி கடந்த 21ம் தேதி ரக்ஷாபந்தனம், கும்பங்கள் யாக சாலை பிரவேசம், முதல் கால ேஹாமம், அஷ்டபந்தனம் சாற்றுதல், 22ம் தேதி சிறப்பு திருமஞ்சனம், பூர்ணாகுதி, சாற்றுமுறை நடந்தது. நேற்று மகா பூர்ணாகுதி, யாத்ராதானம், கும்பங்கள் புறப்பாடாகி, கோவில் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி சம்ப்ரோக்ஷணம் நடந்தது. மன்னார்குடி செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் சுவாமிகள் தலைமை தாங்கி, சம்ப்ரோக்ஷணத்தை நடத்தினார். கொரோனா ஊரடங்கு என்பதால் பக்தர்களுக்கு அனுமதியில்லை என, அறிவிக்கப்பட்டது. அதனை மீறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். போலீசார் தடுப்பு கட்டைகள் அமைத்து பக்தர்களை தடுத்து நிறுத்தினர். பின், சம்ப்ரோக்ஷணம் முடிந்து பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதித்தனர். ஏற்பாடுகளை அறநிலையத் துறை இணை ஆணையர் அசோக்குமார், உதவி கோட்ட பொறியாளர் அசோகன், கோவில் நிர்வாக அதிகாரிகள் ராஜா சரவணக்குமார், ரமேஷ் பாபு, சங்கர், ராஜ ராஜேஸ்வரன், தலைமை எழுத்தர் ஆள்வார், அர்ச்சகர் தேவநாதன் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.