பதிவு செய்த நாள்
11
ஜூலை
2012
10:07
செஞ்சி: செஞ்சியில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள பழமையான மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 13ம் தேதி நடக்கிறது. செஞ்சிக்கோட்டை ராஜகிரி மலை மீதுள்ள கமலக்கன்னியம்மன், சர்க்கரை குளக்கரை மீதுள்ள காளியம்மன் ஆகியன ஐநூறு ஆண்டுகள் பழமையான கோவில்கள். இதே காலகட்டத்தை சேர்ந்த மாரியம்மன் கோவில் செஞ்சி பீரங்கிமேடு பகுதியில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று கோவில்களுக்கும் இப்பகுதி மக்கள் ஒரே நேரத்தில் திருவிழா நடத்துகின்றனர். இந்த திருவிழாவின் போது கமலக்கன்னியம்மன் கோவிலுக்கு ராஜகிரி கோட்டை வழியாக பொதுமக்கள் சென்று வருவதற்கு ஆங்கிலேயர் ஆட்சியின் போதே 10 நாட்களுக்கு இலவச அனுமதி வழங்கி உள்ளனர். தற்போது பீரங்கிமேட்டில் உள்ள மாரியம்மன் கோவிலை பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பித்துள்ளனர். இதில் புதிதாக மூன்று நிலை ராஜ கோபுரம், மகா மண்டபம், விநாயகர், முருகர், ராஜகாளியம்மன், நவக்கிரக சன்னதி அமைத்துள்ளனர். இதனால் மாரியம்மன் கோவில் விரிவு படுத்தப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இக்கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 13ம் தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. இன்று (11ம் தேதி) காலை கோபூஜை, கஜபூஜை, நவக்கிரஹஹோமம், லட்சுமி ஹோமமும், மாலை 7 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜைகளும் நடக்கிறது. நாளை (12ம் தேதி) புதிய விக்ரகங்கள் கரிவலம், அஷ்டபந்தனம் சாற்றுதல், இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடக்க உள்ளன. தொடர்ந்து 13ம் தேதி நான்காம் கால யாகசாலை பூஜையும், நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, மகா பூர்ணாஹுதியுடன் கலசங்கள் புறப்பட்டு காலை 9.30 மணிக்கு ராஜகோபுரம், மூலஸ்தான விமான கும்பாபிஷேகமும், 10 மணிக்கு மூலஸ்தான மகா மாரியம்மனுக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு மாரியம்மன் வீதியுலா நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் அரங்கஏழுமலை மற்றும் உபயதாரர்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.