பதிவு செய்த நாள்
12
ஜூலை
2012
10:07
மழையில்லாததால், கோபமடைந்து, ஊரை விட்டு வெளியேறிய பெண்களை, ஆண்கள் சாந்தமாக்கும், "சீராட்டு விழா ஈரோட்டில் நடந்தது. ஈரோடு மாவட்டத்தின் நீராதாரமாக விளங்கும் காவிரியாறும், அதன் துணை நதிகளான பவானி, நொய்யல், அமராவதி ஆகியவை வறண்ட குளமாக மாறியுள்ளன. மாவட்டத்தில் உள்ள, 2.5 லட்சம் ஏக்கர் நிலத்தில், எவ்வித பயிர் சாகுபடியும் செய்ய முடியாமலும், நாற்று பாவிய வயல்களில் இருந்து, நாற்றை பறித்து நட முடியாமலும், விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். நிலத்தடி நீர்மட்டம், பல நூறு அடிகள் கீழே இறங்கியுள்ளதால், ஆழ்குழாய்களில் நீர் வற்றிப் போய் விட்டது.
பண்டைய பழக்கம்: இதுபோல், மழை பெய்யாத காலங்களில், ஊர் பெண்கள் அனைவரும் சேர்ந்து, கிராமத்துக் கோவிலில் அம்மனை வேண்டி நடத்தப்படும், "சீராட்டு வழிபாடு, கொங்கு மண்டலத்தில், பண்டைய கால வழக்கமாக உள்ளது. இந்த நடைமுறையைப் பின்பற்றி, ஈரோடு அருகே மூலப்பாளையம் பெண்கள், மழை வரம் வேண்டி, நூதனமான முறையில், "சீராட்டு வழிபாடு மேற்கொண்டனர். நேற்று முன்தினம் இரவு, மூலப்பாளையம் மாரியம்மன் கோவில் முன், ஏழை, பணக்காரர் மற்றும் வயது வித்தியாசமின்றி, 100க்கும் மேற்பட்ட பெண்கள் கூடினர். சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மாரியம்மனை வழிபட்டு, வீடு, வீடாக பானையை எடுத்துச் சென்று, கேழ்வரகு, கம்பு ஆகியவற்றை தானமாக பெற்றனர்.
அம்மனிடம் வேண்டுதல்: மீண்டும் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெண்கள், தானமாக பெற்ற தானியங்களைக் கொண்டு, உப்பில்லாமல் கூழ் காய்ச்சினர். அதை அம்மனுக்கு படைத்த பின், ஒவ்வொரு பெண்ணும், கோவிலுக்கு முன் மண்டியிட்டு, கையேந்தி கூழை வாங்கி உண்டனர். பின், மனம் உருக அம்மனை வேண்டிய பெண்கள், பல்வேறு குழுக்களாக பிரிந்து, மூலப்பாளையம் பிள்ளையார் கோவில், பஞ்சாயத்து அலுவலகம், கரூர் ரோடு ஆகிய இடங்களில், மழை வரம் வேண்டி, ஒப்பாரி வைத்து வழிபாடு நடத்தினர்.
ஊரை விட்டு வெளியே...: அதன் பிறகும் மழை பெய்யாததால், "மழையில்லாமல் வறண்டு போன ஊரில் வாழ மாட்டோம் என்றபடி, தங்கள் கணவரிடம் பொய்யாக கோபித்துக் கொண்ட குடும்பத் தலைவிகள், இரவு 11 மணியளவில், ஊரை விட்டு வெளியேறினர். சிறிது நேரம் கழித்து, ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் திரண்டு, ஊருக்கு வெளியே பெண்கள் நின்றிருந்த பகுதிக்குச் சென்றனர். "மாரியம்மன் கண் திறந்ததால் மழை பெய்து விட்டது; ஊரில் வறட்சி நீங்கியது என, மனைவியரை சமாதானம் செய்து, வீட்டுக்கு அழைத்து வந்தனர். "சீராட்டு வழிபாடு என்றழைக்கப்படும் இந்த வழிபாட்டில், கிராம மக்கள் அனைவரும் பங்கேற்றனர்.