பதிவு செய்த நாள்
01
பிப்
2022
12:02
பேரூர்: பேரூர் படித்துறையில், தை அமாவாசையையொட்டி, பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். மறைந்த முன்னோர்களுக்கு, ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில், ஆற்றில் நீராடி முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்வது வழக்கம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய, தமிழகம் மட்டுமல்லாது கேரளா கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், முக்கிய நாட்களில், பொதுமக்கள், பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றுக்கு வருவது வழக்கம். இந்தாண்டு தை அமாவாசை தினமான நேற்று, அதிகாலை முதலே, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமான மக்கள், பேரூர் படித்துறைக்கு வந்தனர். அவர்கள் ஆற்றில் நீராடி, பிண்டம் வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். அதன்பின், பசு மாட்டிற்கு அகத்திக்கீரையும், ஏழைகளுக்கு உணவும் வழங்கினர்.