திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் நேற்று (1ம் தேதி) ,மாலை பத்ர தீப விழா நடந்தது. அழகிய நம்பிராயர் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம், அமாவாசையை முன்னிட்டு திரு வோணத்தன்று பத்ர தீப வழிபாடு நடைபெறும். அதன்படி நேற்று மாலை 6.40 மணிக்கு லட்சுமி பூஜை நடந்தது. இரவு 7 மணிக்கு பெருமாள் சன்னதியில் உள்ள நந்தா விளக்கிலிருந்து தீபம் ஏற்றி வந்து, கொடி மர மண்டபத்தில் உள்ள லட்சுமி விளக்கில் 7.05 மணிக்கு பத்ர தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து கொடி மர மண்டபம், கோயில் உள் மண்டபங்களைச் சுற்றி கயிறு கட்டி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான அகல் விளக்குகளில் பெண்கள் 2 நிமிடங்களுக்குள்ளாக தீபம் ஏற்றினார்கள். 2 நிமிடங்களுக்குள் தீபம் அனைத்தையும் ஏற்றுவது பத்ர தீப விழாவின் தனிச் சிறப்பாகும். இதனை தொடர்ந்து ராமானுஜ ஜீயர் முன்னிலையில், கோயில் உள் மண்டபத்தில் பெருமாள் புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை ஜீயர் மடம் பவர் ஏஜன்ட் சிவ சங்கரன் தலைமையில் ஜீயர் மடம் ஊழியர்கள், அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.