பதிவு செய்த நாள்
02
பிப்
2022
10:02
நான்குநேரி: நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் ஒரு கோட்டை எண்ணெய் காப்பு மற்றும் பத்ரதீபம் நிகழ்ச்சி நடந்தது.
ஆண்டுதோறும் தை அமாவாசையை முன்னிட்டு நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் ஒரு கோட்டை எண்ணெய்க் காப்பு நிகழ்ச்சி நடப்பது வழக்கம் . அது போல் தை அமாவாசையை முன்னிட்டு ஒருகோட்டை எண்ணெய் காப்பு வைபவம் நேற்று காலை நடந்தது. தொடர்ந்து 1008 சங்காபிஷேகம், தங்ககுடத்தில் தீர்த்தம் ஊா்வலம், திருமஞ்சனம், கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் வானமாமலை பெருமாளுக்கு சிறப்பு புஷ்பஅலங்காரம், ஜடாரி, தீர்த்த பிரசாத வினியோகம் நடந்தது. மாலை சுமார் 6 மணிக்கு வானமாமலை பெருமாளுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. இரவில் கருட, கஜலட்சுமி, சேஷவாகனத்தில் வானமாமலை பெருமாள், வரமங்கைத் தாயார், ஆண்டாள் வாகனத்தில் வீதிஉலா நடந்தது. இந்நிகழ்வில் நான்குநேரி மடத்தின் 31வது பட்ட மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் கலந்து கொண்டு ஆசீர்வாதம் செய்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்றும், நாளையும் மாலை 6 மணிக்கு அருகில் உள்ள கிருஷ்ணன் கோயில் வளாகத்தில் உள்ளதெப்பகுளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது.