கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவிற்கு மணிமுத்தா நதியில் இருந்து புனிதநீர் யானை மீது ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வரும் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி முக்கிய நிகழ்வாக மணிமுக்தாற்றில் இருந்து யாக சாலைக்கு புனிதநீர் எடுத்து வரும் நிகழ்வு நேற்று கோலாகலம் நடந்தது. காலை 7:00 மணியளவில் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் சிவாச்சாரியார்கள் இணைந்து கோபூஜை செய்தனர். தொடர்ந்து யானைகள் குதிரைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் மணிமுக்தாற்றில் வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் எடுத்து, சன்னதி வீதி, கடைவீதி, அய்யனார் கோயில் தெரு, தெற்குத் தெரு, கடைவீதி, தென்கோட்டை வீதி, மேலக்கோட்டை வீதி, வடக்குக் கோட்டை வீதி வழியாக யானை மீது சுமந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. சிவனடியார்கள் திருவாசகம் பாடியும் கயிலை வாத்தியங்களை இசைத்தபடி ஊர்வலம் வந்தனர். அதுபோல் 50க்கும் மேற்பட்ட நாதஸ்வர தவில் இசைக் கலைஞர்கள் மங்கள வாத்தியங்களை இசைத்தபடி வந்தனர்.
விழாவில் அமைச்சர் கணேசன், கோவில் செயல் அலுவலர் முத்துராஜா, முன்னாள் எம்எல்ஏ கலைச்செல்வன், கும்பாபிஷேக கமிட்டி தலைவர் அகர் சந்த் உட்பட மக்கள் பிரதிநிதிகள் அனைத்து கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். எஸ்பி சக்தி கணேசன் தலைமையில் ஏஎஸ்பி அங்கித் ஜெயின் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போலீசார் தனியார் செக்யூரிட்டி ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.