பதிவு செய்த நாள்
02
பிப்
2022
02:02
திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா வரும் 7ம் தேதி கொடியேற்றத்துடன், கோலாகலமாக துவங்குகிறது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், நான்குகால நித்ய பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மறறும் ஹிந்து பண்டிகை நாட்களில், சிறப்பு வழிபாடு நடக்கிறது.தவிர கந்தசஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன.
அந்த வகையில், 2022ம் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழா வரும் 7ம் தேதி காலை 4:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இரவு, கிளி வாகனத்தில் கந்தசுவாமி, வீதி உலா வருவார்.வரும் 8ல் காலை தொட்டி உற்சவம், இரவு பூத வாகனம்; 9ல் காலை புருஷாமிருக உபதேச உற்சவம், இரவு வெள்ளி அன்னவாகனம்; 10ல் ஆட்டுக்கிடா வாகனம், இரவு வெள்ளி மயில் வாகனங்களில் வீதியுலா வருகிறார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 13ம் தேதி காலை 10:30 மணிக்கு துவங்குகிறது. இதில் வள்ளி தெய்வானையுடன், கந்தசுவாமி பெருமான் அலங்கரிக்கப்பட்ட தேரில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 16ல் இரவு 7:00 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. 19ல் காலை 7:30 மணிக்கு திருக்கல்யாண வைபவத்துடன், பெருவிழா நிறைவடைகிறது.