திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவிலில் திருடிய பட்டாச்சாரியார்கள் கைது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04பிப் 2022 01:02
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவிலில் 7 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளிப்படி சட்டத்தை திருடிய வழக்கில் கோவிலில் பணியாற்றிய பட்டாச்சாரியார்கள் இருவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது கோவிலான பரிமள ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் உற்சவ மூர்த்தியை சுமந்து செல்ல பயன்படுத்தப்படும் தோளுக்கினியாள் என்றழைக்கப்படும் படி சட்டம் இருந்தது. இந்த படி சட்டம் முழுவதும் பழமையான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வெள்ளிக்கவசம் பொருத்தப்பட்டதாகும். கடந்த 2014ஆம் ஆண்டு இந்த வெள்ளி சட்டங்கள் உரித்து எடுக்கப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் இதுபற்றி விசாரிக்க வேண்டுமென சென்னையை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புகார் அளித்திருந்தார். அதன்படி விசாரணை மேற்கொண்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு பழமையான வெள்ளி படி சட்டங்கள் உரித்து எடுக்கப்பட்டு, அதற்கு பதிலாக பழமையானது போல புதிய வெள்ளி படி சட்டங்கள் உபயதாரர்கள் உதவியுடன் பொருத்தும் பணி நடைபெற்று வருவது தெரியவந்தது. இதுதொடர்பாக கோவில் பட்டாச்சாரியார்கள் முரளி மற்றும் சீனிவாச ரெங்க பட்டர் ஆகிய 2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெள்ளி தகடுகள் உரித்து திருடப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. இதுதொடர்பாக 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முரளி.48. மற்றும் சீனிவாச ரெங்க பட்டர்.58. ஆகிய 2 பேரையும் கைது செய்ததுடன், மயிலாடுதுறை ஏ.ஆர்.சி. ஸ்ரீ காமாட்சி ஜுவல்லரியில் இருந்து 15 கிலோ புதிய வெள்ளி படி சட்டங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரும் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து இருவரும் கும்பகோணம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.