பதிவு செய்த நாள்
05
பிப்
2022
11:02
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில், செல்வ விநாயகர், பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நாளை (6ம் தேதி) நடைபெறுகிறது.
மேட்டுப்பாளையம், சிறுமுகை சாலை வ.உ.சி., வீதி, குலாலர் காலனியில், பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலின் உள்ளே செல்வ விநாயகர், தன்னாசியப்பன், முனீஸ்வரன் ஆகிய சன்னதிகள் உள்ளன. இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து, திருப்பணிகள் செய்யப்பட்டன. நாளை (6ம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழா நேற்று காலை, பிள்ளையார் வழிபாட்டுடனும், காவல் தெய்வம் வழிபாடு பூஜைகளுடன் துவங்கின. மாலை, 4:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து புனித நீரும், முளைப்பாலிகையும், கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்பு திருவிளக்கு ஏற்றி, முதற்கால வேள்வி பூஜை தொடங்கியது. இன்று காலை விமான கலசம் அமைத்தலும், இரண்டாம் கால வேள்வி பூஜையும் நடைபெற உள்ளது. மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜையும், மாலையில் தெய்வத் திருமேனிகளை பீடத்தில் நிறுவி, எண்வகை மருந்து சாத்தப்பட உள்ளது. நாளை (6ம் தேதி) காலை நான்காம் கால வேள்வி பூஜை அடுத்து, யாக சாலையிலிருந்து மூலமூர்த்திக்கு அருள்நிலை ஏற்றலும், பேரொளி வழிபாடும், தாளம் இசைத்தல் ஆகியவை நடைபெற உள்ளன. அதை தொடர்ந்து, 8:00 லிருந்து, 9:00 மணிக்குள், புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவில் அன்னதானமும் வழங்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து சுவாமிகளுக்கு அலங்கார பூஜை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி தர்மகர்த்தா சண்முகம் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.