களக்காடு: களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயில் (பெரிய கோயில்) தெப்ப திருவிழா வரும் 11ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி நேற்று கால் நாட்டு வைபவம் நடந்தது. களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தைமாதம் கடைசி வெள்ளிக்கிழமை தெப்பத் திருவிழாநடப்பது வழக்கம். இவ்வாண்டு வரும் 11ம் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. தெப்பத் திருவிழாவில் முதல் நாளான 11ம் தேதி மாலை சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் தெப்ப உற்சவம், 2ம் நாளான 12ம் தேதி மாலை வரதராஜ பெருமாள் கோயில் தெப்ப உற்சவமும், 3ம் நாள் 13ம் தேதி சந்தான கோபாலகிருஷ்ணசுவாமி கோயில் தெப்பஉற்சவம் நடக்கிறது. இதற்கான திருக்கால் நாட்டும் வைபவம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி கோயிலில் இருந்து திருக்கால் ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, விழா நடைபெறும் தெப்பக்குளத்தின் அருகில் மேளதாளங்கள் முழங்க திருக்கால் நாட்டப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தெப்பக்குள பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.