பதிவு செய்த நாள்
08
பிப்
2022
04:02
சென்னை : சென்னை, அடையாறில் அமைந்துள்ள அனந்தபத்ம நாப சுவாமி கோவிலில், இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம், நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் மகா கணபதி ஹோமம், ஸ்ரீ சக்ராயுதம் புறப்பாடு, மூஷிக வாகனத்தில் மகா கணபதி அலங்காரம் நடந்தது.கொடியேற்ற நாளான நேற்று காலை, யஜமான சங்கல்பம், ரக்ஷா பந்தனம், ஸ்ரீதேவி, பூதேவி சமேத அனந்தபத்மநாப சுவாமி அலங்காரம் நடந்தது. காலை 9:00 மணிக்கு, மீன லக்னத்தில் கொடியேற்றம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை, 4:00 மணிக்கு கலச ஸ்தாபனத்துடன் யாகசாலை ஆரம்பமானது.உற்சவத்தின் பிரதான நாளான, 13ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. வரும், 16ம் தேதி தீர்த்த வாரி உற்சவமும், அன்று மாலை, 7:00 மணிக்கு பல்லக்கு வாகனம் வெண்ணெய் தாழி கண்ணன் அலங்காரமும் நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.