பதிவு செய்த நாள்
08
பிப்
2022
05:02
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட கலசப்பாக்கம் ஆற்றுத் திருவிழாவை முடித்துக்கொண்டு இன்று அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு திருப்பிய உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தை அமாவாசை முடிந்து, 7ம் நாளில் வரும் ரத சப்தமியன்று சூரியன், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் வடக்கு நோக்கி திரும்புவதாக ஐதீகம். இதை கொண்டாடும் வகையில், கலசப்பாக்கம் செய்யாற்றில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி நடப்பது வழக்கம். இதையொட்டி நேற்று காலை, 5:00 மணிக்கு உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் கோவிலிலிருந்து புறப்பட்டு, கலசப்பாக்கம் செய்யாற்றுக்கு சென்றார். செல்லும் வழியில், தனகோட்டிபுரம் கிராமத்தில், அருணாசலேஸ்வரர் அவருக்கு சொந்தமான, வயலுக்கு சென்று அங்குள்ள விளைநிலங்களை பார்வையிடும் நிகழ்வு நடந்தது. அங்கு பொங்கலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, கலசப்பாக்கத்தில் உள்ள திரிபுரசுந்தரி சமேத திருமாமூடீஸ்வரர், செய்யாற்றில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரரை வரவேற்று, ஒன்றாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வும், தீர்த்தவாரியும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். கலசப்பாக்கம் செய்யாற்றில் இந்தாண்டு நீர் இருந்ததால், பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். இதை தொடர்ந்து, இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனம் வழங்கி, இன்று அங்கிருந்து புறப்பட்டு உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், மீண்டும் கோவிலுக்கு திரும்பும் நிகழ்வு நடைபெற்றது. திருப்பிய உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.