அறந்தை வீரமாகாளியம்மன் கோவிலில் நாளை பூச்சொரிதல்: 24ல் ஆடி திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2012 11:07
புதுக்கோட்டை: அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு நாளை (13ம் தேதி) பூச்சொரிதல் நடக்கிறது. 24ம் தேதி ஆடித் திருவிழா துவங்குகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களில் அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவிலும் ஒன்று. திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா வரும் 24ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. ஆகஸ்ட் 14ம் தேதி வரை விழா தொடர்ந்து 22 நாட்கள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆகஸ்ட் 1, 2 ஆகிய இரு தேதிகளில் தேரோட்டம் நடக்கிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ள தேர் திருவிழாவில் வீரமாகாளியம்மன் சர்வ அலங்காரத்துடன் திருத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆடித் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு நாளை பூச்சொரிதல் நடக்கிறது. அறந்தாங்கி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் பல்லக்குகளில் பூத்தட்டுகள் ஊர்வலமாக எடுத்துவந்து அம்மனுக்கு விடிய, விடிய அபிஷேகம் செய்யப்படுகிறது.விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர், விழா கமிட்டியினர், மண்டகபடிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.