பதிவு செய்த நாள்
13
ஜூலை
2012
10:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆடி அமாவாசை யொட்டி சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் கோயில் செல்லும் பக்தர்கள், தீ பிடிக்கும் பொருட்கள், பாலிதீன் பைகளை கொண்டு செல்லவும், ஒலி பெருக்கி, ஜெனரேட்டர் வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ,"" மண்டல வன பாதுகாவலர் சேகர் குமார் நிரஞ்ச் தெரிவித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலய பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு ஜூலை 18ல் நடக்கும் ஆடி அமாவாசை யொட்டி , லட்சக்கணக் கான பக்தர்கள் 16ம் தேதி முதலே வர துவங்குவர் . இதைதொடர்ந்து கோயில் செல்லும் பக்தர்கள் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள், மலை பகுதியில் குடிநீர்,மருத்துவம், உணவு போன்ற வசதிகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தது. இதில் தலைமை வகித்த , மண்டலவன பாதுகாவலர் பேசியதாவது: கோயில் வரும் பக்தர்கள் வனத்தை பாதுகாப்பதோடு, விலங்குகளுக்கும் இடையூறு செய்ய கூடாது. மது, எளிதில் தீ பற்றும் பொருட்கள், பாலிதீன், அதிக சத்தத்துடன் கூடிய ஒலி பெருக்கி, ஜெனரேட்டர் போன்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. துணி, சணல் பைகளையே கொண்டு வர வேண்டும். வறட்சியால் மலையில் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் உள்ளதால், பக்தர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். பாலிதீன் பைகளில் வழங்க கூடாது. பக்தர்கள் மலைக்கு கொண்டு வரும் தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்களை அங்கேயே விடாமல் ,எடுத்து வர வேண்டும். தீ விபத்து தடுக்க அன்னதானத்திற்காக சமையல் செய்ய கூடாது. ஏற்கனவே தயார் செய்த உணவுகளையே வழங்க வேண்டும். வழிப்பாதையில் கடைகள் வைக்க அனுமதியில்லை. குப்பைகளை கண்ட இடத்தில் விட்டு செல்லாமல், அதற்கென வைக்கப்பட்ட தொட்டிகளில் போட வேண்டும். பக்தர்களின் வசதிக்காக மருத்துவ முகாம்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் ,என்றார். ஸ்ரீவி.,தாசில்தார் திரவுபதி, தீயணைப்புத்துறை, அறநிலைய துறை அதிகாரிகள், பக்தர்கள் சங்கத்தினர், பசுமை பாரத இயக்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.