பதிவு செய்த நாள்
12
பிப்
2022
05:02
திருப்பூர்: திருமுருகன்பூண்டி, திருமுருகநாதசுவாமி கோவில் மாசி தேர்த்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.கொங்கு நாட்டில் உள்ள ஏழு சிவாலயங்களில் முக்கியமானதும், மேற்கு நோக்கி அமைந்துள்ள கோவிலாகவும் பிரசித்தி பெற்றது திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவில். கோவிலில், சிவபெருமான் திருமுருகநாத சுவாமியாகவும், அம்பாள், முயங்குபூண்முலை அம்மனாகவும் அருள்பாலிக்கின்றனர்.
ஆயிரம் ஆண்டு புராதன பழமை வாய்ந்த இக்கோவில், மத்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவரான, சுந்தரரிடம் சுவாமி வேடுபறி நிகழ்த்தியதும், தேவாரம் பாடியதும் இத்தலத்தின் கூடுதல் சிறப்பு.கோவிலில் மாசி தேர்த்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடி மரம் முன்பு, பஞ்சமூர்த்திகள் எழுந்தருள சிறப்பு ேஹாம பூஜைகளுக்கு பின், கொடியேற்றப்பட்டது. திருவிழாவில், இன்று, சூரிய, சந்திர மண்டல காட்சி, நாளை பூதவாகனம் - சிம்ம வாகன காட்சி, 14ம் தேதி, புஷ்ப விமான காட்சியும் நடக்கிறது.முக்கிய வைபவங்களில் ஒன்றான, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு வரும், 15ம் தேதி நடக்கின்றன. விநாயகர், மூஷிக வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும், சோமாஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் காளை வாகனத்திலும், சண்முகநாதர் மயில் வாகனத்திலும், சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.வரும் 16ம் தேதி, ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு, திருக்கல்யாணமும், யானை வாகனம், அன்னவாகன காட்சிகளும் நடைபெற உள்ளன. வரும் 17ம் தேதி மதியம், 2:00 மணிக்கு வடம் பிடித்தல் மற்றும் தேரோட்டம் நடைபெற உள்ளன.வரும் 19ம் தேதி தெப்பத்தேர்; 20ம் தேதி ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழா; 21ம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக்காட்சி; 22ம் தேதி மஞ்சள் நீர் விழா, மயில் வாகன காட்சிகள் நடைபெற உள்ளன.