காரைக்கால்: திருமலைராயன்பட்டினத்தில் மாசிமகத்தை முன்னிட்டு வசந்த மண்டபத்தில் இருந்து உன்மத்த நடனத்துடன் தியாகராஜர் எழுந்தருளினார்.
காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில் ஜடாயுபுரீஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் சார்பில் மாசிமகப் பிரும்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த 6ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவக்கியது. தினம் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் கடந்த 7ம் தேதி விநாயகர் மற்றும் ரிஷபக்கொடி வீதியுலா, 8ம் தேதி சூரிய பிறையில் சுவாமி வீதியுலா, 9ம் தேதி சந்திர பிறையில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. நேற்று வசந்த மண்டபத்தில் இருந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தியாகராஜரை வாரையில் கட்டி,பயிற்சிபெற்ற கார்க்க மொழி,அத்திப்படுகை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மேலதாள வாத்தியங்களுடன் உன்மத்த நடனத்துடன் எழுந்தருளினார். இதில் நாகதியாகராஜன் எம்.எல்.ஏ.,உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.