விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சி: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2022 03:02
கடலூர்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளில், விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் சுவாமிகள் காட்சிதரும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து வருகிறது. பஞ்சமூர்த்திகள் காலையில் பல்லக்கிலும், மாலையில் சிறப்பு வாகனங்களிலும் வீதியுலா வந்து அருள்பாலிக்கின்றனர். முக்கிய நிகழ்வாக கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி இன்று நடந்தது. இதற்காக பெரியநாயகர் சுவாமி சித்திர மண்டபத்தில் எழுந்தருளினார். தருமபுரம் 27வது ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி உட்பிரகார வலம் வந்து, கிழக்கு கோபுர வாயில் வழியாக விபசித்து முனிவருக்கு காட்சி கொடுத்தார். பக்தர்கள் வெள்ளம்போல திரண்டிருந்து நமசிவாய கோஷமிட்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று பகல், இரவு மற்றும் நாளை பிற்பகல் வரை சுவாமி வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். நாளை பிற்பகல் சுவாமி கோவிலை வந்தடைந்ததும் சிறப்பு தீபாராதனை நடக்கிறது.