திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2022 10:02
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா வந்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1:30 க்கு தீபாராதனை நடந்தது. காலை 8:40 மணிக்கு சுவாமி அம்பாள்களுடன் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் வெட்டிவேர் சப்பரத்தில் தூண்டுகை விநாயகர் கோவில் அருகே பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 3:55 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாள்களுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி செம்மையுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார்.பின்னர் எட்டு வீதிகளிலும் உலா வந்தனர்.
இன்று பச்சை சாத்தி: எட்டாம் திருநாளான இன்று திங்கட்கிழமை அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளுடை அணிந்து வெள்ளை நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் பெரிய வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வருகிறார். பகல் 12:00 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிறப் பட்டுடுத்தி பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை சாத்தி கோலத்தில் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.