திருக்கோஷ்டியூர் மாசித் தெப்பத்திற்கு முகூர்த்தக் கால்: பெண்கள் தீபம் ஏற்றி பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2022 07:02
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாரயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உத்ஸவத்தை முன்னிட்டு இன்று (13ம் தேதி) மாலை தெப்பத்திற்கு முகூர்த்தக் கால் ஊன்றப்பட்டது. தெப்பக்குளத்தைச் சுற்றி பெண்கள் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் 11 நாட்கள் தெப்ப உத்ஸவம் நடைபெறும். பிப்.7 ல் கொடியேற்றப்பட்டு உத்ஸவம் துவங்கியது. தினசரி காலையில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது. இன்று காலை சூர்ணாபிஷேகமும், மாலை 4.20 மணி அளவில் தெப்பக்குளத்தில் கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் முன்னிலையில் தெப்பத்திற்கு முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. தொடர்ந்து கோயிலில் சுவாமிக்கு சூர்ணாபிஷேகமும், தங்கப் பல்லக்கில் சுவாமி அருள்பாலித்தலும் நடந்தது. பிப்.17 ல் 11ம் திருநாளன்று காலையில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியும், மாலையில் தங்கப் பல்லக்கில் சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளும் நடைபெற்று உத்ஸவம் நிறைவடையும்.
பெண்கள் தீபம் ஏற்றி வேண்டுதல்: வைணவத் தலமான திருக்கோஷ்டியூர் கோயிலில் நெய் விளக்கேற்றி பெருமாளை பிரார்த்திப்பது பிரசித்திப் பெற்றது. பிரார்த்திப்பவர்கள் ஒரு தீபத்தை சுவாமியிடம் வைத்து பின் வீட்டிற்கு கொண்டு செல்கின்றனர். அவ்விளக்கில் காசும், துளசியும் வைத்து சிறு பெட்டியில் பூஜையறையில் வைக்கின்றனர். விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருளியிருப்பதாக ஐ தீகம். வேண்டுதல் நிறைவேறிய பின்னர் மாசித் தெப்ப உற்ஸவத்தின் போது இந்த விளக்குடன் மற்றொரு நெய் விளக்கை தெப்பக்குளக்கரையில் வைத்து வழிபடுகின்றனர். புதிதாக வேண்டுபவர்கள் இந்த விளக்கை எடுத்துச் செல்கின்றனர். இந்தாண்டும் உற்ஸவம் துவங்கிய சில நாட்களில் பெண்கள் குளக்கரையில் தீபம் ஏற்றி வழிபாட்டைத் துவக்கி விட்டனர். அடுத்த நாட்களில் திரளாக பெண்கள் தீபம் ஏற்றி வழிபடுவது அதிகரிக்கும்.