திருச்செந்தூர் மாசி திருவிழா : பச்சை சாத்தி கோலத்தில் சண்முகர் வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2022 10:02
தூத்துக்குடி: சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவில் சுவாமி சண்முகர் நேற்று பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 8ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6:00மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலையில் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் வெண்பட்டு அணிந்து வெண் மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் வீதியுலா வந்து சிவன் கோயில் அடைந்தார். அங்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. மதியம் 1:10 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்மன் பச்சை பட்டு உடுத்தி மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இன்று 15ம் தேதி இரவு சுவாமி குமரவிடங்கபெருமான், தங்க கைலாய பர்வத வாகனத்திலும் அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். நாளை 16ம் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது.