ராஜபாளையம்: ராஜபாளையம் சொக்கர் கோவில் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தெப்ப திருவிழாவை முன்னிட்டு சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மாசி மகம் மகா பிரம்மோற்ஸவம் 10 நாள் திருவிழாவை முன்னிட்டு கடந்த 7ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் கோயில் வெளிச்சுற்றில் வலம் வருகிறார். எட்டாம் திருநாளான நேற்று மாலை 7:00 மணிக்கு கோயில் பின்புறம் அமைந்துள்ள மானசரோவர் திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்பாள், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனை தொடர்ந்து பக்தர்கள் கோஷம் முழங்க குதிரை வாகனத்தில் சுற்றிவந்து சுவாமி காட்சி அளித்தார். நிகழ்ச்சியை முன்னிட்டு தெப்பம் முழுவதும் பூக்கள் மற்றும் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பல்வேறு பகுதியிலிருந்தும் திரளான பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.