திருக்கோஷ்டியூரில் மாசித்தெப்பம்: தீர்த்த வாரியுடன் விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2022 08:02
திருக்கோஷ்டியூர் : சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் சவுமியநாரயணப் பெருமாள் கோயில் மாசி ெதப்ப திருவிழாவை முன்னிட்டு நேற்று காலையிலும், இரவிலும் தெப்பத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளி குளத்தில் வலம் வருதல் நடந்தது. இன்று காலை சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் 11 நாட்கள் தெப்ப திருவிழா நடைபெறும். பிப்.7ல் கொடியேற்றப்பட்டு துவங்கியது. தினசரி காலையில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு கோயிலிலிருந்து தங்கப் பல்லக்கில் தேவியருடன் சுவாமி புறப்பாடு துவங்கியது. திருவீதி வலம் வந்து தெப்பக்குள மண்டபத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜை, தீபாராதனை முடிந்து தெப்பத்தில் எழுந்தருளி குளத்தை வலம் வந்தார். குளக்கரையை சுற்றி பக்தர்கள் நின்று தெப்பத்தில் எழுந்தருளிய பெருமாளை வழிபட்டனர். தெப்பம் வலம் வந்தபின் பெருமாள் மீண்டும் தெப்பக்குள மண்டபம் வந்தடைந்தார். பக்தர்கள் சுவாமி தரிசனம் தொடர்ந்தது. இரவு 9:00 மணிக்கு மீண்டும் தெப்பத்தில் பெருமாள் எழுந்தருளி குளத்தை வலம் வந்தார். நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனமும், குளக்கரையைச் சுற்றி விளக்கேற்றியும் பிரார்த்தனை செய்தனர். எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கொரானா 3வது அலை காரணமாக பக்தர்களின் கூட்டம் குறைவாகக் காணப்பட்டது. இன்று காலை 11 ம் திருநாளை முன்னிட்டு சக்கரத்தாழ்வாருக்கு தெப்பக் குளத்தில் தீர்த்தவாரியும், மாலையில் பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளலுடன் விழா நிறைவடைகிறது.