ஒருமுறை பிரம்மா, தனது வழிபாட்டுக்காக பெருமாளின் விக்ரகம் தேடியலைந்தார். சரியான விக்ரகம் கிடைக்காததால், பெருமாளை எண்ணி ஒரு யாகம் நடத்தினார். யாக குண்டத்தில் இருந்து ஒரு சிலை வெளிப்பட்டது. அவரே வரதராஜர் என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் அருள்புரிகிறார். பெருமாளின் முகத்தில் அக்னி பட்ட தழும்பு இருப்பதைக் காணலாம். ஏற்கனவே உஷ்ணமாக இருக்கும் இந்தப் பெருமாளுக்குரிய நைவேத்யத்தில் மிளகாய் சேர்ப்பதில்லை. வல்லபாச்சாரியார் என்ற பக்தர் மூங்கில் குழாயில் வேகவைத்த இட்லியை இவருக்கு படைத்து வந்தார். இதற்கு சட்னியோ, மிளகாய் பொடியோ கிடையாது. இன்றும் காலை நைவேத்யம் இட்லி தான். அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், சுக்கு, உப்பு, நெய் சேர்த்து இந்த இட்லியைத் தயாரிப்பர். மதுரை அழகர்கோவிலில் தோசை நைவேத்யம் பிரபலம். காஞ்சிபுரத்தில் இட்லி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படும்.