பதிவு செய்த நாள்
23
பிப்
2022
10:02
திருப்பதி:திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், மார்ச் மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் சர்வ தரிசனத்திற்கான, டோக்கன்கள் இன்று காலை வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம், இன்று காலை 9:00 மணிக்கு, மார்ச் மாதத்திற்கான 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் மற்றும் சர்வ தரிசனத்திற்கான டோக்கன்களை இணையதளத்தில் வெளியிட உள்ளது. தினசரி, 25 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் 20 ஆயிரம் சர்வ தரிசன டோக்கன்களை, பக்தர்கள் முன்பதிவுவாயிலாக பெற்று ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். மேலும், பிப்ரவரி மாதத்துக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்ட நிலையில், நாளை முதல், பிப்., 28ம் தேதி வரை, கூடுதலாக தினசரி 13 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. அதோடு, பிப்., 26 - 28ல் திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜ ஸ்வாமி சத்திரம் ஆகிய இடங்களில், 5,000 டோக்கன்களை நேரடியாக தரவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.